2.0 படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் சொன்னது – ‘வீ மிஸ் யூ சுஜாதா’!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படம் நேற்று வெளியாகி உலகெங்கும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம், இந்தியாவின் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம், முதல் முறையாக 3டி தொழில்நுட்பத்தில் உருவானத் திரைப்படம், உலகம் முழுவதும் 10000க்கும் அதிகமான திரையரங்குகளில் திரைப்படம் ஆகிய பெருமைகளோடு நேற்று வெளியாகியுள்ளது 2.0 திரைப்படம்.
படம்பார்த்த ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுவான ரசிகர்கள் படத்தை ஆஹா ஒஹோவெனப் புகழ்ந்தாலும் சில சினிமா ரசிகர்கள் சுஜாதா இல்லாதக் குறை அப்பட்டமாகத் தெரிகிறது என தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துள்ளன.
இயக்குனர் ஷங்கரின் திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு எழுத்தாளர் சுஜாதாவின் பங்கும் மிக முக்கியமானது என்பது தமிழ்நாடு அறிந்த உண்மை. அவர்கள் இணைந்து பணியாற்றிய இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன் மற்றும் சிவாஜி படங்களின் உருவாக்கத்திலும் வசனத்திலும் அது வெளிப்படையாகத் தெரியும். சினிமாவில் வசனம் என்பது காட்சிகளுக்கு அடுத்த இரண்டாம் இடம்தான் என சுஜாதாவே சொல்லி இருந்தாலும் அந்த படங்களின் வசனங்கள் காட்சியின் தேவைக்கு ஏற்ப அருமையாக எழுதப்பட்டிருக்கும்.
ஆனால் சுஜாதாவின் மறைவிற்குப் பிறகு ஷங்கரின் படங்களின் வசனங்களும் ஏன் உருவாக்கமுமே இறங்கு முகமாகவே உள்ளது என சுஜாதா ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். சுஜாதா இல்லாமல் ஷங்கர் உருவாக்கிய திரைப்படங்களான நண்பன், ஐ, 2.0 போன்ற படங்களின் வசனங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த குறைபாடு நமக்கு நன்றாக விளங்கும்.
அதனால்தான் ஷங்கரும் தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு வசனகர்த்தாவைப் பயன்படுத்தி வருகிறார். ஆனாலும் சுஜாதா – ஷங்கர் காம்போ போல எந்த கூட்டணியும் சிறப்பான தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கவில்லை என்பது கண்கூடு.
அதனால் சுஜாதா மற்றும் நல்ல சினிமா ரசிகர்கள் 2.0 படம் பார்த்துவிட்டு சொல்வது என்னவென்றால் ‘வீ மிஸ் யூ சுஜாதா’.