தந்தையை அடுத்து மகனும் கமல்ஹாசனுக்கு ஆதரவு
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று பேசினார். கமல்ஹாசனின் இந்த பேச்சால் ஆத்திரம் அடைந்த தமிழக அமைச்சர்கள் 'கமல் எல்லாம் ஒரு ஆளா? என்றும், கமலை ஒருமையில் அழைத்தும், அவர் மீது வன்கொடுமை சட்டம் பாயும் என்றும் பயமுறுத்தினர்
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக திமுக செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை அடுத்து அவரது மகனும் பிரபல நடிகருமான உதயநிதியும் தற்போது கமலுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். ஜனநாயகத்தில் அனைவருக்கும் தங்கள் கருத்தை பதிவு செய்யும் உரிமை உள்ளது என்றும், கருத்துக்கு பதில் கருத்து தெரிவிக்க முடியுமே தவிர, கருத்து தெரிவிப்பதை யாரும் தடை செய்ய முடியாது என்றும் உதயநிதி கூறியுள்ளார். தந்தை, மகன் ஆகிய இருவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து நோக்கி வருகின்றனர்.