என்னுடைய புகைப்படத்தை காட்டினால் ஏமாந்துவிடாதீர்கள்.. நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு..!
என்னுடைய புகைப்படத்தை காட்டி ஏதேனும் முறைகேடு செய்ய முயற்சித்தால் யாரும் ஏமாந்து விட வேண்டாம் என்று நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைதளத்தில் எச்சரிக்கை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் ஒரு நடிகன் என்பதால் என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்றும், பலரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது சாதாரணமாக நடக்கும் விஷயம்.
இந்த மாதிரி புகைப்படங்களை வைத்துக்கொண்டு என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு யார் என்ன காரணத்துக்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிகவும் கவனமாக இருங்கள்.
என்னிடம் எந்த சிபாரிசும் எடுபடாது, என் விஷயங்களில் நான் மட்டுமே முடிவெடுக்கிறேன், என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக் கொண்டு கதைகள் பல சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது என்பதற்காகவே இந்த பதிவு என பதிவு செய்துள்ளார். ஏற்கனவே சீமான் புகைப்படம் குறித்த சர்ச்சை எழுந்து உள்ள நிலையில் ராஜ்கிரணின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.