‘ஏஏஏ’ இரண்டாம் பாகம் உறுதியாம்…
சிம்பு நடிப்பில் வெளியான ‘ஏஏஏ’ படம் படுமொக்கை என விமர்சிக்கப்பட்டாலும், அதன் இரண்டாம் பாகம் நிச்சயம் வெளிவரும் எனத் தெரிவித்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஸ்ரேயா சரண், தமன்னா இருவரும் ஹீரோயின்களாக நடித்த இந்தப் படத்தை, மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே, இரண்டாம் பாகம் இருக்கிறது என்றனர். ஆனால், சமீபத்தில் வெளியான படங்களிலேயே இதுதான் படுமொக்கை என்று சொல்லும் அளவுக்குப் படம் இருந்தது. சிம்பு ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்காமல் கழுவிக் கழுவி ஊற்றினர்.
சிம்புவும், ஆதிக் ரவிச்சந்திரனும் சினிமாவை விட்டே விலகுவது சினிமாவுக்கு நல்லது என்கிற ரீதியில் எல்லாம் சமூக வலைதளங்களில் கலாய்த்தனர். எனவே, இரண்டாம் பாகம் வருவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லப்பட்டது. ஆனால், இரண்டாம் பாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டதாக ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.