திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: புதன், 16 டிசம்பர் 2015 (05:31 IST)

கஹவத்தை கொலைச் சந்தேகநபர் மேலும் 6 பெண்களின் கொலைகளுடன் தொடர்பு

இலங்கையில் இரத்தினபுரி கஹவத்தை பகுதியில் பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர், மேலும் ஆறு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று பெல்மதுளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரிடமிருந்து மீட்கப்பட்ட இரத்த கறைபடிந்த கத்திகள் மற்றும் ஆடைகளை மரபணு சோதனைக்குட்படுத்தியதில், கஹவத்தை கொட்டக்கெத்தன பகுதியில் கடந்த காலங்களில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட பெண்கள் ஆறு பேரின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கஹவத்தை கொட்டக்கெத்தன பகுதியில் கடந்த சில வருடங்களாக பெண்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டு வந்த நிலையில்,சில மாதங்களுக்கு முன்னர் நாகம்மா பாபு என்ற பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார், நீல் லக்ஷ்மன் என்ற 35 வயது நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

இவரிடமிருந்து இரத்த கறைபடிந்த கத்திகள் மற்றும் ஆடைகளை மீட்ட பொலிஸார், அவற்றை மரபணு சோதனைக்குட்படுத்தினர்.

இந்த மரபணு சோதனையின் முடிவுகளின்படி, கொட்டக்கெத்தனவில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட பெண்கள் ஆறு பேரின் மரபணுக்கள் பொருந்துவதாக பெல்மதுளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்பித்த பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு இது தொடர்பில் தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பொலிஸார் முன்வைத்த கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேகநபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

கொட்டக்கெத்தன தொடர் கொலை சம்பவம் தொடர்பில் பல வருடங்களாக எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் கவனயீனமாக செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.