வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 6 நவம்பர் 2014 (12:05 IST)

நாளை வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

ஐ, லிங்கா, அனேகன் போன்ற திமிங்கலங்களுக்கு நடுவில் எப்படியாவது நமது படகையும் ஓட்டி கரை சேர்க்க வேண்டும் என்ற கவலையில் சுமார் 90 தயாரிப்பாளர்களாவது இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வாரமும் அடுத்த வாரமும் வரப்பிரசாதம். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, ஜெய்ஹிந்த் 2 தவிர்த்து பெரிய படங்கள் எதுவும் இந்த வாரம் வெளியாகவில்லை.
தொடர்ந்து ரீமேக் படங்கள் இயக்கி வந்த கண்ணன் சொந்த ஸ்கிரிப்டில் எடுத்திருக்கும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. ஒரு ராஜா விமல், இன்னொருவர் சூரி. ராணி ப்ரியா ஆனந்த். விசாகா சிங்கும் படத்தில் இருக்கிறார்.
 
படத்தின் முதல்பகுதி ஓடும் ரயிலில் நடக்கிறது. ராஜாவும், ராணியும் இந்த ரயில் பயணத்தில்தான் சந்தித்துக் கொள்கிறார்கள். அந்த சந்திப்பு ஏற்படுத்தும் திருப்புமுனைதான் கதையில் கண்ணன் வைத்திருக்கும் சஸ்பென்ஸ்.
 
மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசை. நடிகர், நடிகைகளை பாடகராக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இமான் இந்தப் படத்தின் மூலம் லட்சுமி மேனனையும் பாடகியாக்கி தமிழர் காதுகளை பதம் பார்த்திருக்கிறார். லட்சுமி மேனன் பாடியிருக்கும் பாடலுக்கு படத்தில் ஆடியிருப்பவர் இனியா. ஒளிப்பதிவு பி.ஜி.முத்தையா.
 
காமெடிக்கு முக்கியத்துவம் தந்து எடுத்திருப்பதால் இந்த வாரம் ஜெயிக்கப் போகிற குதிரை என்று இதனை சொல்லலாம்.

அடுத்த பெரிய படம் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2. அர்ஜுனின் மார்க்கெட் டல்லடித்துக் கொண்டிருந்த நேரம் அவர் இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் வெளியானது. படம் சூப்பர்ஹிட். இப்போதும் அர்ஜுனின் மார்க்கெட் டல்தான். ஜெய்ஹிந்த் 2 ஹிட்டாகுமா?
கல்வியின் தேவையைச் சொல்லும் கதையாம் இது. காந்தீயத்தையே அடிதடியுடன்தான் அர்ஜுனால் சொல்ல முடியும். கல்வி கதையிலும் கணிசமான ஆக்ஷன் பிளாக் உள்ளது. மூன்று பேர் மூன்று காதலில் தன்னுடன் நடித்த சுர்வீனையே இதிலும் நாயகியாக்கியிருக்கிறார். பெரிய விளம்பரம் எதுவும் இல்லாமல் சட்டென்று படம் வெளிவருவதால் ரசிகர்கள் பலருக்கு இந்தப் படம் வெளியாவதே தெரியவில்லை.
 
இந்த இரு படங்கள் தவிர்த்து பண்டுவம் என்ற நேரடித் தமிழ்ப் படமும், முகப்புத்தகம் என்ற தெலுங்கு டப்பிங் படமும் நாளை திரைக்கு வருகின்றன. 
 
இந்தப் படங்களால் கத்தி, பூஜையின் பாக்ஸ் ஆபிஸ் ஆதிக்கத்தை ஓரளவாவது குறைக்க முடிந்தால் அதுவே சாதனைதான்.