வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (14:26 IST)

ஹாலிவுட் திமிங்கலங்களை விழுங்கிய சின்ன மீன் டோரி

ஹாலிவுட் திமிங்கலங்களை விழுங்கிய சின்ன மீன் டோரி

இரண்டு வாரங்கள் முன்பு வெளியானது, ஃபைன்டிங் டோரி. டோரி என்ற சின்ன நீலநிற மீன் தனது பெற்றோர்களை தேடிச் செல்வதுதான் படத்தின் கதை.


 


தொலைந்து போன தங்கமீன் நிமோவை அதன் பெற்றோர்கள் தேடிச் செல்லும், ஃபைன்டிங் நிமோ படத்தில் இந்த டோரியும் இடம்பெற்றிருந்தது. அதன் இரண்டாம் பாகம் போல் வெளியாகியிருக்கிறது, ஃபைன்டிங் டோரி.
 
அனிமேஷன் படமான இது இந்த வருடம் வெளியான அனைத்து அனிமேஷன் படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளது. முதல் மூன்று தினங்களில் இப்படம் யுஎஸ்ஸில் மட்டும் 135 மில்லியன் டாலர்களை வசூலித்தது. பிளாக் பஸ்டர் ஹிட்டான, டாய் ஸ்டோரி 3 கூட இந்த ஓபனிங்கை பெறவில்லை.
 
இரண்டாவது வார இறுதியில் 73 மில்லியன் டாலர்களுடன் அதே முதலிடத்தில் டோரி உள்ளது. முதல் பத்து தினங்களில் யுஎஸ்ஸில் மட்டும் 286 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. இந்த வருடம் வெளியான படங்களில் கேப்டன் அமெரிக்கா திரைப்படம் 403 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இப்படியே போனால் கேப்டன் அமெரிக்காவின் வசூலை டோரி எளிதாக முறியடித்துவிடும்.
 
யுஎஸ்ஸில் பட்டையை கிளப்பும் இந்தப் படம் யுஎஸ்ஸுக்கு வெளியே முதல் பத்து தினங்களில் 111 மில்லியன் டாலர்களையே வசூலித்துள்ளது (கேப்டன் அமெரிக்கா 743 மில்லியன் டாலர்கள்). அமெரிக்கர்கள் கொண்டாடும் சில படங்களை மற்ற நாடுகளில் உள்ளவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. டோரிக்கு வெளிநாடுகளில் போதுமான வரவேற்பு இல்லை. இந்தியாவில் முதல் 10 தினங்களில் 1.9 மில்லியன் டாலர்களையே வசூலித்துள்ளது. த ஜங்கிள் புக்குடன் ஒப்பிடுகையில் இது மிகமிகக் குறைவு.
 
அதேநேரம், பிரிட்டன், ஜெர்மனி உள்பட 21 நாடுகளில் டோரி இன்னும் வெளியாகவில்லை. இந்த நாடுகளில் வெளியாகும் போது வசூல் 400 மில்லியன் டாலர்களை தாண்ட வாய்ப்புள்ளது.
 
சென்ற வாரம் வெளியான இன்டிபென்டன்ஸ் டே படத்தின் இரண்டாம் பாகம் 41 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஃபைன்டிங் டோரி 73 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. 
 
ஹாலிவுட்டின் படா ஸ்டார்களான ட்வைனி ஜான்சன், டாம் க்ரூஸ், புரூஸ் வில்லிஸ், பென் ஸ்டில்லர், பிராட் பிட் போன்றவர்களின் படங்களைவிட டோரி மிக அதிகம் வசூலித்துள்ளது. 
 
கொசுறு தகவல் - டோரி சின்ன நீலநிற மீனைப் பற்றிய கதை என்றாலும், இந்தப் படத்தின் பட்ஜெட், இன்டிபென்டன்ஸ் டே இரண்டாம் பாகத்தின் பட்ஜெட்டைவிட அதிகம். கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர்கள். 
 
சின்ன மீன் பெரிய பட்ஜெட்.