வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 23 நவம்பர் 2016 (11:04 IST)

சினி பாப்கார்ன் - காப்பியடித்தாரா பாரதிராஜா...?

மோடியின் செல்லாது அறிவிப்பால் மொத்த இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எஸ்.வி.சேகர் போன்ற மேட்டுக்குடி மோஸ்தர்கள், எங்களுக்கு சின்னதாக ஒரு அசௌகரியமும் இல்லை என்று பசப்பி வருகின்றனர். அவர்கள் இருக்கும், பேசும் இந்தியாவும், சாதாரணர்களின் இந்தியாவும் வேறு.

 
இதைச் சொல்ல காரணம் இருக்கிறது. இப்போது படத்தை வெளியிட்டால் போணியாகுமா என்ற கவலை எல்லா தயாரிப்பாளர்களுக்கும் இருக்கிறது. நவம்பர் 18 திரைக்கு வருவதாக இருந்த கத்தி சண்டை படத்தின் வெளியீட்டை டிசம்பர் மாதத்துக்கு மாற்றி வைத்தவர்கள், டிசம்பரிலும் பணத்தட்டுப்பாடு சரியாகுமா என்ற ஐயம் காரணமாக அடுத்த வருடத்துக்கு படவெளியீட்டை தள்ளி வைக்கலாமா என்று யோசித்து வருகின்றனர். இதே நிலைதான் பல படங்களுக்கும்.
 
மோடியின் அறிவிப்பால் எனக்கு லாபம் என்று கூறியிருக்கிறார், கௌதம். பணத்தட்டுபாடு காரணமாக வேறு படங்கள் எதுவும் வெளியாகாததால் அச்சம் என்பது மடமையடா படத்துக்கு நல்ல கூட்டம். அதேநேரம் வேறு படங்கள் வெளியாகியிருந்தால் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். ஒரு டஜன் படங்கள் வெளியீட்டிலிருந்து விலகிக் கொண்டதால் அச்சம் என்பது மடமையடா கல்லா கட்டியது. கௌதம் சொன்னது போல் மோடியின் நடவடிக்கையால் கிடைத்த பலன் அது. கௌதமுக்கும், அவரது படத்துக்கும் மட்டுமே இது பொருந்தும்.
 
பாரதிராஜாவும் காப்பி அடித்துவிட்டாரே என்று கோடம்பாக்கம் முழுக்க பேச்சு. அட, அப்படி எதை காப்பியடித்துவிட்டார் என்று பார்த்தால், அதுவொரு விளம்பர போஸ்டர். தனது அடுத்தப் படத்துக்கு புதுமுகங்கள் தேவை என்று பாரதிராஜா அறிவித்திருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள விளம்பர டிசைன் ஹாலிவுட்டில் வெளிவந்த இயக்குனர் ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் விளம்பர போஸ்டர் போலவே உள்ளது. அதை வைத்துதான் காப்பி என்கிறார்கள்.
 
அட, அது டிசைனர் செய்த தவறு, அதுக்கு பாரதிராஜா எப்படி பொறுப்பேற்க முடியும் என்று கேட்கிறார்கள் அவரைச் சார்ந்தவர்கள். அதானே... அவர்கள் கேட்பதும் நியாயம்தானே.
 
த்ரிஷாவுக்கு என்னாச்சு? ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பேட்டி தந்திருக்கிறார். நான் நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் பிரிய வேண்டும் என்றெல்லாம் கலைத்தாயின் மூத்த மகள் மாதிரி அவர் உணர்ச்சிவசப்பட்டிருப்பதைப் பார்த்து சகக் கலைஞர்களே கலங்கிப் போயுள்ளனர். திருமணம் தள்ளிப் போகிறது. நிச்சயதார்த்தம்வரை வந்த திருமணமும் திடீரென்று நின்றுவிட்டது. மனதுக்குப் பிடித்த வரன் இதுவரை அமையவில்லை. அந்த விரக்தியில்தான், சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன், உயிர் போகும் போதும் நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் கூறுவதாக ஒரு வெட்டிக் கூட்டம் கிசுகிசுக்கிறது. 
 
கலைத் தாகத்தை இப்படி கல்யாண தாபமாக திரிக்கலாமா, கிசுகிசு கிரியேட்டர்களே...?