திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2016 (12:52 IST)

அஜித், விஜய் ரசிகர்களிடையே சண்டை மூட்டிவிட்ட ஜி.வி.பிரகாஷ் - முழு விவரம்

அஜித், விஜய் ரசிகர்களிடையே சண்டை மூட்டிவிட்ட ஜி.வி.பிரகாஷ் - முழு விவரம்

நடிச்சு நாலு படம் வரலை, அதுக்குள்ள தம்பி விடைச்சிட்டு நிற்குறாரே என்று கோடம்பாக்கத்தில் ஜி.வி.பிரகாஷை நினைத்து 'உச்' கொட்டும் ஒலிகள் கேட்கின்றன.


 


ஆளுக்கு தகுந்த பேச்சில்லை என்பதே அவர் மீதான பொதுவான குற்றச்சாட்டு.
 
ஜி.வி.க்கு இது நல்ல நேரம். பொல்லாத கதைகளில் நடித்தாலும் போட்ட பட்ஜெட்டை படங்கள் எடுக்கின்றன. முத்தின கத்திரிக்காயைவிட அதனுடன் வெளியான எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்துக்கு வசூல் அதிகம். இதே ரூட்டில் ஏதோ ஒரு இடத்தைப் பிடிக்காமல், தேவையில்லாத விஷயங்களில் தலையை கொடுத்து தாண்டவமாடுகிறார் ஜி.வி.
 
பிரபல ஆங்கில நாளிதழ் பிரபல நடிகராக தனுஷை தேர்வு செய்தது. அதனால் ஜி.வி.க்கு என்ன வந்தது? ரசிகர்கள் தேர்வு செய்தது விஜய்யை, அவரது பேட்டி கிடைக்காததால் அவருக்கு கிடைக்க வேண்டிய விருதை வேறொரு நடிகருக்கு தந்திருக்கிறார்கள் என்று தேவையில்லாமல் கொந்தளித்து தனுஷ் மற்றும் அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். விளைவு...? வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த ஜி.வி. வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் இல்லை. அவருக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
 
விஜய் பிறந்தநாளுக்கு, அண்ணா வாழ்த்துகள் என்று வாழ்த்திவிட்டு போய்டே இருந்திருக்கலாம். அப்போதும், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று ஒரு போடு போட்டார். அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் என்று அஜித் ரசிகர்களும், இல்லை விஜய் என்று விஜய் ரசிகர்களும், இன்றைய இளைய சூப்பர் ஸ்டார் தனுஷே அடுத்த சூப்பர் ஸ்டார் என தனுஷ் ரசிகர்களும் வடம் இழுக்கிறார்கள். இதன் நடுவே, சூப்பர் ஸ்டார் என்றால் எங்க தலைவர் மட்டும்தான் என்று ரஜினி ரசிகர்கள் வேட்டியை இறுககட்டுகிறார்கள். இப்படியொரு சூழலில் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கமெண்ட் போட்டு ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். அந்த சூடு தணிவதற்குள் அடுத்த மெகா சண்டை.
 
எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தைப் பார்த்த ஒரு ரசிகர், நீங்க இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணம் என்று ஜி.வி.யை ட்விட்டரில் விமர்சித்தார். அதற்கு அந்த ரசிகரை காலாய்த்திருந்தால் ஒன்றுமில்லை. அந்த ரசிகர் அஜித் ரசிகர் போலிருக்கிறது. உங்க நடிகரை முதல்ல தண்ணி, தம், பெண்களை இழிவுப்படுத்துற காட்சிகளில் நடிக்காமல் இருக்கச் சொல்லுங்க என்று பந்தை அஜித்திற்கு அடிக்க, அஜித் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். அதேநேரம் விஜய் ரசிகர்கள், அப்படிதான் பாஸு செமையா அடிங்க என்று ஜி.வி.யை ஏத்திவிட, ட்விட்டர் போர்க்களமானது.
 
அஜித், விஜய் ரசிகர்கள் இணையத்தில் சட்டையை கிழித்துக் கொண்டிருக்க, அதற்கு காரணமான ஜி.வி. ட்விட்டரில் இதுவரை பதிவிட்ட அனைத்தையும் டெலிட் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
 
சின்ன வயதில் அதிக புகழ், அதிக பணம் கிடைத்தால் மனம் கடிவாளம் தாண்டி பாயும். ஜி.வி.விஷயத்தில் நடந்து கொண்டிருப்பதும் அதுதான். நாலு ப்ளாப் வரும்போது எல்லாம் சரியாகிவிடும்.