வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:06 IST)

நடிகர்களே.... தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றிவிட்டு போராடுங்கள்

தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுந்துள்ளது. தமிழக  மக்களின் பிரச்சனைக்கு போராட மாட்டோம் என்று சொன்ன நடிகர் சங்கம் வேறு வழியில்லாமல் மௌனப் போராட்டத்தை  நடத்தி வருகிறது. உண்மையிலேயே நடிகர் சங்கத்துக்கு தமிழர்கள் மீதும், தமிழர்கள் பாண்பாடு மீதும் அக்கறை இருக்குமேயானால், முதலில், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்றிருப்பதை தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றிவிட்டு போராடுங்கள்.

 
ஒருகாலத்தில் மதராசப்பட்டணத்தில்தான் தெலுங்கு, மலையாள, கன்னட திரைப்படங்கள் தயாராயின. தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கான மையமாக மதராசப்பட்டணம் இருந்தது. காலமாற்றத்தில் மலையாள சினிமாவை அவர்கள் கேரளாவிலேயே தயாரிக்க ஆரம்பித்தனர். அதேபோல் தெலுங்கு, கன்னட சினிமாக்களும் அந்தந்த மாநிலங்களிலேயே தயாராயின. கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று எல்லா மாநிலங்களிலும் நடிகர் சங்கங்கள், தயாரிப்பாளர்கள் சங்கங்கள் தனித்தனியாக ஆரம்பிக்கப்பட்டன. அவை அந்தந்த மாநில பெயர்களிலேயே அறியப்படுகின்றன.
 
மலையாள சினிமாவுக்கான நடிகர் சங்கத்தின் பெயர், AMMA. அசோஸியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்டிஸ்ட். இதேபோல் தெலுங்கு, கன்னட நடிகர்கர்கள் சங்கமும் அவர்களின் மாநிலப் பெயரில் மொழிப் பெயரில்தான் இயங்குகின்றன. ஆனால், தமிழகத்தில் உள்ள தமிழ் நடிகர்கள் சங்கம் மட்டும் இன்னும் தென்னிந்திய நடிகர்கள் சங்கமாகத்தான் இயங்குகிறது.  தயாரிப்பாளர்கள் சங்கமும் அப்படிதான் முன்பு இயங்கியது. பிறகு தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கமாக பெயர் மாறியது. ஆனால், நடிகர்கள் சங்கம் மட்டும் இன்னும் பிடிவாதமாக தென்னிந்திய நடிகர் சங்கமாகவே தொடர்கிறது. அது ஏன்?
 
தமிழ்நாடு நடிகர்கள் சங்கமாக பெயர் மாற்றினால் மட்டுமே என் மகன் அதில் உறுப்பினராவான் என்று பாராதிராஜா பல  வருடங்கள் முன்பே அறிவித்தார். பலர் அறிவுறுத்தியும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தமிழ்நாடு நடிகர்கள் சங்கமாக  மாறவில்லை.
 
தமிழ் சினிமாவில் பல மாநிலத்தைச் சேர்ந்த நடிகர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தான் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று  பெயர் வைத்திருக்கிறோம் என சப்பைக்கட்டு கட்டுகின்றனர். ஏன் மலையாள, தெலுங்கு, கன்னட சினிமாக்களில் பிற  மொழிக்காரர்கள் படம் நடிக்கவில்லையா? அவர்கள் தங்கள் மாநிலப் பெயர்களில் சங்கம் வைத்திருப்பதால் அங்கு பிற மாநிலத்தவர்கள் படம் நடிக்க தடை விதித்திருக்கிறார்களா? இல்லையே. பிறகேன் தமிழகத்தில் மட்டும் தென்னிந்தியா என்ற பெயரில் நடிகர் சங்கம் இயங்க வேண்டும்?
 
தென்னிந்திய நடிகர் சங்கம் என்று பெயர் இருப்பதால், இவர்களின் சட்டதிட்டம் மற்ற மாநில நடிகர்கள் சங்கத்தை  கட்டுப்படுத்துமா என்றால் அதுவும் இல்லை. தமிழகத்துக்கு வெளியே தென்னிந்திய நடிகர்கள் சங்கம் ஒரு செல்லாக்காசு.
 
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மௌனப்போராட்டம் நடத்துகிற நடிகர்களுக்கு உண்மையிலேயே தமிழர் மீதும், தமிழகம் மீதும், தமிழர் பண்பாடு மீதும் அக்கறை இருக்குமேயானால் முதலில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயரை தூக்கி கடாசிவிட்டு தமிழ்நாடு நடிகர்கள் சங்கமாக பெயரை மாற்றுங்கள். பிற மாநில நடிகர்களுக்கு இருக்கும் மொழி, இன அக்கறை முதலில் உங்களுக்கு வரட்டும். அதன் பிறகு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  போராடலாம்.