புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பது ஏன்...?

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றும், புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவதும் நம்மவர்களின் வழக்கம். மேலும் புரட்டாசி மாதங்களில் பெரும்பாலானவர்கள் அசைவத்தைத் தவிர்த்து விட்டு, சைவ உணவை மட்டுமே  எடுத்துக் கொள்வார்கள். 
ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில், 6-வது ராசியாக வருவது கன்னி ராசி. சூரியன் ஒவ்வொரு ராசியில் நுழைந்து வெளிவரும் கால அளவே மாதமாக கணக்கிடப்படுகிறது. கன்னி ராசியின் அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். புதன் மகாவிஷ்ணுவின் சொருபம். எனவே தான்  புரட்டாசி மாதத்தில், பெருமாளை வழிபடும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது.
 
புதன் பகவான் சைவத்திற்குரிய கிரகம் என்பதால், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும், அந்த மாதத்தில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து துளசி நீரை பருக வேண்டும் என்று சாஸ்திரம் செல்கிறது.
 
புதனுக்குரிய உணவு என்பது உப்பு, காரம் இல்லாத உணவு தான். துவர்ப்பு சுவை அதிகம் உள்ள உணவுகளே புதனுக்குரிய உணவுகளாக இருக்கின்றன. இவரது உணவு வகையில் அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், சைவ உணவுகள் மட்டுமே இவருக்கானது. 
 
அதே நேரத்தில் நாம் அறிவியல் ரீதியிலான விளக்கத்தையும் இங்கே பார்த்து விடுவோம். புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை  குறைந்து காணப்படும். மேலும் பூமியின் இயக்கத்துக்கு தகுந்தபடி நமக்கு செரிமானக் குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்படுவதோடு,  கெட்டக் கொழுப்பு உடலில் தங்கிவிடும் காலமும் இது தான். ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை  தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.
 
தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும், காற்றும் குறைந்து, மழை காலம் தொடங்கும் மாதம் ஆகும். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகி இருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இதனால் புரட்டாசி மாதத்தை ‘சூட்டை கிளப்பிவிடும் காலம்’ என்றும் சொல்லலாம்.
 
இந்த காலமானது, வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை  அதிகப்படுத்தி, உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சினையை ஏற்படுத்தும். அதனால் தான், நமது முன்னோர்கள் புரட்டாசி  மாதம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தனர்.