எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள்...?
ஆடை தானம்: ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.
வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுகபோக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.
தேன் தானம்: புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று
(இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.
நெய் தானம்: பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகல விதமான நோய்களும் தீரும்.
தீப தானம்: இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒரு முறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.
அரிசி தானம்: பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.
கம்பளி-பருத்தி தானம்: வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி தானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டு விடலாம்.