நவக்கிரக தோஷங்கள் போக்கும் நவபாஷாண வழிபாடு...!
நவபாஷாணம் ஒன்பது பாஷாணத்தை உள்ளடக்கியது. நவம் என்றால் ஒன்பது என்று பொருள்படும். பாஷாணம் என்பது விஷத்தைக் குறிக்கும். 64 வகையான பாஷாணாங்களில் நீலி என்னும் பாஷாணமானது மற்ற 63 ஐயும் செயலிழக்க வைத்துவிடும் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு பாஷாணத்துக்கும் தனித் தனியான இயற்பியல், வேதியியல் குணங்கள் உண்டு.
பாஷாணத்தை உரிய முறையில் கையாள தெரிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே. போகர் என்னும் சித்தரின் நூல்களில் நவபாஷாண சிலை பற்றிய தகவலை தனது சீடரான புலிப்பாணி சித்தருக்கு கூறியுள்ளார். பாஷாணங்கள் ஒன்பது வகைப்படும். அவை கெளரி பாஷாணம், கெந்தக பாஷாணம், சீலைப் பாஷாணம், வீரப் பாஷாணம், கச்சாலப் பாஷாணம், சூதப் பாஷாணம், சங்கு பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், தொட்டி பாஷாணம் இவை ஒன்பதையும் கலந்து மனோன்மணி அம்மனின் பூரண அருளைப் பெற்று பாஷாணங்களை ஒன்றுகட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே உரியது. அணுக்களைப் பிரித்து சித்தரியல் முறைப்படி மீண்டும் சேர்ப்பதே நவபாஷணக் கட்டு எனப்படுகிறது. இவற்றில் நவக்கிரங்கங்களின் குணங்கள் அதிகளவில் ஒத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நவபாஷணங்கள் கொண்டு உருவாக்கப்படும் தெய்வ சிலைகள் நவக்கிரகங்களின் அபரிமிதமான சக்தியையும் சேர்த்து பெற்று விடுகிறது.
தமிழ்நாட்டில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகன் சிலை, கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில், தேவிப்பட்டினம் போன்ற இடங்களில் காணலாம். இதில் இரண்டு தெய்வசிலைகள் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டவை. நவபாஷாணங்களால் உண்டான சிலையை வணங்கினால் நவக்கிரகங்களை வழிபடுவதாக ஐதிகம்.
நவக்கிரக தோஷங்கள், நவக்கிரக பரிகாரங்கள், நவக்கிரக திசைகளின் தாக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்புகளிலிருந்து மீண்டுவர நவபாஷாண சிலை வழிபாடு நல்ல பலனைத்தரும். நவபாஷாண சிலைக்கு செய்யப்படும் அபிஷேக நீரை குடித்தால் தீராத நோயும் தீர்ந்துவிடும் என்கிறார்கள் பக்தர்கள்.
துன்பங்களைக் களைய நவகிரகங்களின் சக்தியை அபரிமிதமாக கொண்டிருக்கு நவபாஷாண தெய்வ சிலையை தேடிச்சென்று வணங்குவோம்.