சிறப்புகள் நிறைந்த சிவனுக்கு செய்யப்படும் ஆருத்ரா அபிஷேகம்!!
சிவபெருமானின் ரூபத்தை பெரும்பாலான சிவாலயங்களில் சிவ லிங்கமாக தான் காட்சி தருவது வழக்கம். ஆனால் சில சிவாலயங்களில் இருக்கும் சிவனின் நடராஜர் ரூபம் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
அப்படி நடராஜர் ஸ்வாமிக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும். அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மிக முக்கிய நாளாக ஆருத்ரா அபிஷேப் பெருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகின்றது. திருவாதிரை திருவிழாவான ஆருத்ரா அபிஷேகம், தரிசன பெருவிழா ஜனவரி 1-ஆம் தேதி முதல் தொடங்கியது.
வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவரும் சிவபெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை துதித்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை, குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.
அதிலும் குறிப்பாக சிதம்பரத்திலும், உத்திரகோச மங்கையிலும் மகா ஆருத்ரா அபிஷேகப் பெருவிழா ஜனவரி 1-ம் தேதி கோலாகலமாகத் தொடங்குவது வழக்கம். சிதம்பர நடராஜர் திருக்கோயிலில் 10 நாட்கள் கோலாகலமாக நடக்கும்.
இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஈசன் சூரிய பிரபை, சந்திரப்பிரபை, பூதவாகனம், ரிஷபம், கஜவாகனம், கைலாச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவது வழக்கம். ஜன 8-ஆம் தேதி பிட்சாடனர் தங்கத்தேரில் எழுந்தருளுவார், மறுநாள் ரத உற்சவம் நடைபெறும்.