செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆஞ்சநேயர் பெற்ற அற்புத வரங்கள் என்ன தெரியுமா...?

அனுமன் சிறுவனாக இருந்த போது, சூரியனை சுவையான பழம் என்று தவறாக கருதினார். அதனால் அந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று முயற்சி செய்தார். 


மண்ணில் இருந்து விண்ணை நோக்கிப் பறந்த அனுமன், சூரியனைப் பிடித்து விழுங்க முயன்றார். அதே நேரத்தில் சூரியனைப் பிடிக்க ராகுவும் வந்து  கொண்டிருந்தது. 
 
அனுமனின் திடீர்ப் பாய்ச்சலைப் பார்த்து பயந்துபோன ராகு, தேவர்களின் தலைவனான இந்திரனிடம் உதவி கோரினார். இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அனுமனை  தாக்கினார். இதில், அனுமன் முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயமே ‘அனுமன்’ என்ற பெயருக்கு பின்னால் உள்ள காரணமாகும். ‘அனுமன்’ என்பதற்கு  தாடை ஒடுங்கப்பெற்றவன் என்று பொருள்.
 
தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டதை கண்டு வருந்திய வாயு பகவான், அனுமனை தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார்.  வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டன.
 
தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில்  சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.
 
வருணன், காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார். யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என  வரமருளினார். 
 
குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார். 
 
சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.
 
விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்படமாட்டார் என்றார். 
 
பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்றும், பிராமணர்களால் சாபம் அளிக்கப்பட மாட்டார் என்றும் அருளினார். மேலும், அனுமன் தான் விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ அடைய மாட்டார். நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் அவரால் செல்ல முடியும்  என்றும் வரமளித்தார்.
 
இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார்.