பௌர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் !!
புண்ணியம் தரும் துலா மாதமான ஐப்பசியில் வரும் பௌர்ணமி தினத்தில் சிவபெருமான் ஆனந்த நிலையில் யோகத்தில் ஆழ்ந்திருப்பார். அந்த நாளில் அவருக்குச் செய்யப்படும் அன்னா பிஷேகம் அபிஷேகங்களில் எல்லாம் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.
முற்காலங்களில், ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்து, ஊரே வெள்ளக்காடாக இருக்கும்போது, ஊர்மக்கள் எல்லோருக்கும் அடைக்கலமாகத் திகழ்ந்தது ஆலயங்கள்தான். ஊர்மக்கள் அனைவருக்கும் தேவையான உணவைச் சமைத்து, சமைத்த உணவை இறைவனுக்கு அபிஷேகமும் நிவேதனமும் செய்து, ஊர்மக்கள் பசியாறப் பரிமாறுவார்கள். அன்று ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெற்ற இந்த வழிபாடு, தற்போது பௌர்ணமி தினங்களில் மட்டும் நடைபெறுகிறது.
ஐப்பசி பௌர்ணமி தினத்தில், நிலத்தில் அறுவடையான புது நெல்லைக் குத்தி, புடைத்து, அதை அவித்து வடித்து அன்னம் சமைப்பார்கள். இந்த அன்னத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்து, அன்னத்தாலும், காய்கனிகளாலும் அலங்காரம் செய்வார்கள். பின்னர், அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும். இந்த அன்னத்தைப் புசிப்பவர்கள் சகலவித பாக்கியங்களையும் பெறுவார்கள்.
பசியே எடுக்காதவர்கள், பசித்தும் வேண்டிய அளவுக்கு அன்னம் கிடைக்காதவர்கள் எல்லோரும் அன்ன த்வேஷம் எனும் தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் என ஞான நூல்கள் கூறும். அவர்கள் இந்நாளில் ஈசனை வழிபட்டு அன்னப் பிரசாதம் உண்டால் நலம் பெறுவார்கள்.
இந்த நாளில் அன்னமிடுவதும், அன்னாபி ஷேகத்துக்கு - சிவாலயங்களுக்கு நிவேதனப் பொருள்கள் வாங்கிக் கொடுப்பதும் பாவ - தோஷ நிவர்த்தியை அளிக்கும் என்கின்றன ஞானநூல்கள்.