தியானத்தின் மூலம் ஞானம்; புத்தரின் அருளுரை
தியானத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. தியானத்தின் குறைவால் ஞானம் குன்றிவிடுகிறது. திருப்திதான் பெருஞ்செல்வம்.
* தீமை புரிபவன் இந்த உலகில் துன்புறுகிறான். மறுமையிலும் துன்புறுகிறான். இரண்டிலும் அவனுக்குத் துன்பமே. தான் செய்த தீமையைப் பற்றி நினைக்கும்போது அவன் துன்புறுகிறான். தீய பாதையில் செல்லும்போது இன்னும் அதிகமாய்த் துன்புறுகிறான்.
* காஷாய ஆடைகளால் தோள்களை மூடிக் கொண்டிருப்பவர்களிலும் கூட பலர் தன்னடக்கமின்றி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். அத்தகைய தீமை புரிபவர்கள் தங்கள் தீச்செயல்களாலேயே நரகத்தை அடைகிறார்கள்.
* குற்றமற்றவர்களைத் தண்டித்துத் தீங்கு செய்கிறவன், கூர்மையான வேதனை, வியாதி, உடற்குலைவு, பெரும் விபத்து, சித்தப்பிரமை, அரசு தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு, உறவினர்களை இழத்தல், அனைத்து செல்வம் இழப்பு, நெருப்பாலோ, இடியாலோ அவன் வீடு எரிந்துபோதல் ஆகிய துன்பங்களில் ஒன்றை உறுதியாகக் காண்பான். மரணத்தின்போதும் அந்த வறட்டு மூடன் துக்கத்தில்தான் மறுஜனனம் காண்கிறான்.
* கருத்துடைமையில் களிப்புறு; உன் எண்ணங்களைக் கட்டிக் காத்துக்கொள்; சோர்வுறாதே. சேற்றில் விழுந்த யானையைத் தூக்கி விடுவதுபோல் உன்னைத் தீயவழியிலிருந்து மீட்டுக்கொள்.
* வெளிப்புறத்தைக் கழுவியது போதும்! உட்புறத்தைக் கழுவுவதே எனக்குத் தேவை.