வெண்ணெய் மலை முருகன் கோவில் சாலையை சீரமைக்க வேண்டுகோள்!
வெண்ணெய் மலை முருகன் கோவில் சன்னதிச் சாலையை உடனடியாக சீரமைத்து புதிய சாலை அமைக்க திருக்குறள் பேரவை வேண்டுகோள்!
கருவூர் பகுதியில் அமைந்துள்ள தொன்மையான கோயில்களுள் ஒன்று வெண்ணெய் மலை பாலசுப்பிரமணிய சாமி கோயில். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் பலநூறு பக்தர்கள் வருகை தருகிறார்கள். முகூர்த்த நாட்களில் பல திருமணங்கள் நடைபெறுகிறது.
சஷ்டி, கிருத்திகை, பெளர்ணமி கிரிவலம், படிபூஜை, பங்குனி உத்திரம், தைப்பூசம், தேர்த் திருவிழா, கந்தர் சஷ்டி எனப் பல பெருவிழாக்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். தேனு தீர்த்தம், குளம், கருவூரார் வழிபாடு என பல சிறப்புக்களைக் கொண்ட இக் கோயில் மெயின் சாலையில் இருந்து ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
இச்சாலை பல ஆண்டுகளாக பராமரிப்போ புதிய சாலையோ போடப்படாமல் குண்டும் குழியுமாகவே உள்ளது. இந்தச் சாலையை உடனடியாக புதிய தார் அல்லது சிமெண்ட் சாலை ஆக போட்டுத் தர அப்பகுதி மக்கள், திருக்குறள் பேரவை, படி பூஜை சஷ்டிக் குழு, பெளர்ணமி கிரிவலக் குழு ஆகியோர் பலமுறை வேண்டுகோள் வைத்தும் பயனில்லை. அதே தெருவில் உள்ள புகழ் பெற்ற தனியார் ஏற்றுமதி நிறுவனம் தங்கள் செலவில் சாலை அமைத்து ஆலய நுழைவு வளைவு அமைக்கவும், அனுமதி கேட்டு தரப்படவில்லை என அறிகிறோம்.
உடனடியாக நகராட்சி, மாவட்ட நிர்வாகம் அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு திருக்குறள் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் நகராட்சி ஆனையர், அறநிலையத் துறை செயல் அலுவலர் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருக்கு இம்மனு அனுப்பப்பட்டுள்ளதாக கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை பழநியப்பன் தெரிவித்துள்ளார்.