விண்வெளிக்கு செல்லும் தமிழக வீரர்! யார் இந்த அஜித் கிருஷ்ணன்?
இஸ்ரோவிலிருந்து முதன்முறையாக ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்களின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் இடம் பெற்றுள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த காலங்களில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம், நிலவிற்கு சந்திரயான், செவ்வாய்க்கு மங்கள்யான் என பல விண்கலன்களை விண்ணில் ஏவி வல்லரசு நாடுகளுக்கு நிகரான முயற்சிகளை குறைந்த பொருட்செலவில் செய்து காட்டியுள்ளது.
அந்த வகையில் இந்தியாவிலிருந்து இஸ்ரோ மூலமாக முதன்முறையாக விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர். இந்த ககன்யான் திட்டம் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக திட்டமிடப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு வீரர்கள் விண்வெளிக்கு செல்ல உள்ளனர். இதற்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள் பெயரையும் பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
இந்த நான்கு வீரர்களில் ஒருவர்தான் தமிழகத்தை சேர்ந்த வீரர் அஜித் கிருஷ்ணன். சென்னையை சேர்ந்த அஜித் கிருஷ்ணன் 1982ம் ஆண்டில் பிறந்தவர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்து தேர்ச்சி பெற்ற இவர் விமானப்படை பயிற்சி அகாடமியில் இவரது சிறப்பான செயல்பாட்டிற்காக குடியரசு தலைவரிடம் தங்கப்பதக்கம் மற்றும் மரியாதை வாளை பெற்றார்.
இந்திய விமானப்படையில் போர் விமானப்பிரிவில் குரூப் கேப்டன் மற்றும் விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் செயல்பட்டவர் அஜித் கிருஷ்ணன். 2,900 மணி நேரத்திற்கு அதிகமாக விமானங்களை இயக்கிய அனுபவம் உள்ள அஜித்கிருஷ்ணன் அனைத்து வித அதிநவீன விமானங்களையும் இயக்கும் திறன் பெற்றவர்.
இந்தியாவின் மிகப்பெரும் வரலாற்று சாதனையாக மாற உள்ள ககன்யான் திட்டத்தின் மூலம் முதன்முறையாக விண்ணை தொடும் வீரர்களின் பட்டியலில் ஈடுபட்டுள்ள அஜித் கிருஷ்ணன் மிகப்பெரும் வரலாற்று சாதனை படைக்க பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
Edit by Prasanth.K