போட்டோ எடுக்க ரூ.100 வசூல் - தொடரும் வைகோவின் வசூல் வேட்டை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ. 100 வசூல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரபரப்பிற்கு என்றைக்குமே பஞ்சமில்லாதவர் வைகோ. தேர்தலில் பிரபலமடைந்ததை விட, சர்ச்சைக்குரிய கருத்துக்களாலேயே மிகவும் பிரபலமானவர் வைகோ. சமீபத்தில் தேர்தலுக்கு முந்தி திமுக தலைவர் கருணாநிதியின் சாதிப் பெயரைக் குறிப்பிட்ட பின்னர், மன்னிப்பு கேட்டார்.
நேற்று முன்தினம் கூட, திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வாளாடியில், நடைபெற்ற கூட்டம் ஒன்றில், ’எனது ராஜதந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், நேற்று புதுக்கோட்டையில் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபொழுது, ”அப்படி சொல்லவில்லை. அவர் அளவிற்கு தனக்கு ராஜதந்திரம் இல்லை என கலைஞர் நினைக்கிறார். ஒருபோதும் மதிமுகவை அழிக்கவிடமாட்டேன் என சொன்னதாகவும், ஆனால் பத்திரிக்கைகளில் செய்திகள் திருத்தி தவறாக வெளியிடப்பட்டுள்ளது” என வைகோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின், தன்னுடன் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் ரூ. 100 கொடுத்து எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
அதன் பிறகு, கூட்டத்திற்கு வந்தவர்கள் ரூ 100 கொடுத்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். பின்னர், இந்த பணம் கட்சியின் வளர்ச்சி நிதிக்காக பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.