மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடை நிழல். ஸ்பெயினில் தோன்றிய யோசனை
கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. வெயில் சுட்டெரித்து வருகிறது. வெளியே செல்பவர்கள் நிழல் கிடைக்காதா? என்று ஏங்கும் காலம் இது. இயற்கையான மரங்களை வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும் அந்த விழிப்புணர்வு இன்னும் முழுமையாகவில்லை.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கார் பார்க்கிங் பகுதியில் சமூக ஆர்வமுள்ள பெண் ஒருவர் குடைகளாலே நிழல் பாதை அமைத்துள்ளார். அபர்ணா ராவ் என்றா அந்த பெண்ணுக்கு இந்த ஐடியா அவருக்கு எப்படி வந்தது? என்பது குறித்து அவரே சொல்வதை பார்ப்போம்
எனக்குச் சொந்த ஊர் சென்னை. மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றேன். அங்கிருந்து பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளேன். எங்குச் சென்றாலும் கேமராவும் கையுமாக, நல்ல காட்சிகளை சிறை பிடிப்பேன். அப்படித்தான் இந்த கலர் கலர் குடைகளின் புகைப்படத்தை எடுத்தேன் . ஸ்பெயினில் குடைகளைத் திருவிழா காலங்களில் இப்படிப் பயன்படுத்துவார்கள். நம் தமிழ்நாட்டிலும் இப்படிச் செய்தால் நன்றாக இருக்குமே என்று அப்போதே நினைத்தேன். தற்போதுதான் அந்த வாய்ப்பும் நேரமும் கிடைத்தது. மதுரை மாநகராட்சியின் உதவியோடு அமைத்தோம்.
மதுரையில் தற்போது மரங்கள் குறைந்துகொண்டே செல்கிறது. சீமை கருவேல மரங்களை ஒழிப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. நாம் மரங்களை வளர்ப்பது தொடர்பாக ஏதாவது விழிப்புஉணர்வு செய்யலாமே என்று தோன்றியது. மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங் பகுதியில் இந்தக் குடைப் பந்தலை அமைத்திருக்கிறோம். யானைப் பசிக்கு சோளப்பொறியா என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும். அங்கே முழுமையான நிழல் கிடைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
முழுமையான நிழலைக் கொடுக்க பல மரங்களை நடவேண்டும் என்ற ஆர்வத்தை மறைமுகமாகத் தூண்டவே இந்த ஏற்பாடு. எல்லா இடங்களிலும் குடைகளால் பந்தல் போட முடியாது. ஆனால், மரங்களை உருவாக்கி நிரந்தர நிழலுக்கு வழி செய்யலாம். விளம்பரம் இருந்தால்தான் எந்த விஷயத்தையும் வெற்றியாக்க முடியும். இன்னும் சில நாட்களில், மரங்கள் வளர்ப்பது தொடர்பான வாசகங்களும் நிழற்குடைகளின் அருகே வைக்கப்போகிறோம். இதுபோன்று இன்னும் சில யோசனைகளை மதுரை மாநகராட்சியிடம் கொடுத்துள்ளேன். அவர்களின் உதவியோடும் பொதுமக்களின் ஒத்துழைப்போடும் பல நல்ல விஷயங்களைச் செய்வேன்'' என்று புன்னகையுடன் சொல்கிறார் அபர்ணா ராவ்.
அபரணா ராவ் அவர்களின் சமூக சேவை நீடிக்க நமது வாழ்த்துக்கள்