செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (11:37 IST)

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தண்ணீர் தர மறுப்பதா? டிடிவி தினகரன் கண்டனம்..!

dinakaran
உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் தமிழ்நாட்டிற்கான உரிய தண்ணீரை திறந்துவிட தொடர்ந்து மறுத்துவரும் கர்நாடக அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை கர்நாடக மாநிலம் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
போதுமான மழையில்லை என காரணம் கூறி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் திரு. டி.கே.சிவக்குமார் பேசியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வஞ்சிக்கும் வகையிலும் தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் வகையிலும் கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.சிவக்குமார் பேசியிருப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல.
 
காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் போதிய தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், இனியும் இரட்டைவேடம் போடாமல் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு வரும்போது வலுவான வாதங்களை முன்வைத்து தமிழ்நாட்டிற்கான நீரை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்
 
Edited by Mahendran