வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 27 ஜூலை 2017 (09:51 IST)

தமிழக அமைச்சரவை மாற்றம்?: ஓபிஎஸ் துணை முதல்வர்?

தமிழக அமைச்சரவை மாற்றம்?: ஓபிஎஸ் துணை முதல்வர்?

தமிழக அமைச்சரவை மாற்றம் இன்னும் சில நாட்களில் இருக்கும் எனவும் அப்போது அதிமுகவின் எல்லா அணிகளும் இணைந்து இருக்கும் எனவும் அந்த அமைச்சரவையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் துணை முதல்வராக இருப்பார் எனவும் தகவல்கள் வருகின்றன.


 
 
சில நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றார், அதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லிக்கு சென்றார். இவர்களின் இந்த டெல்லி பயணத்தின் போது பல முக்கிய விஷயங்களை பாஜக தரப்பினருடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.
 
பாஜகவின் முக்கிய பிரமுகரை சந்தித்த ஓபிஎஸ் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டிக்கு பணம் கொடுத்து எடப்பாடி அணியினர் தங்கள் பக்கத்தில் இழுத்ததை சொல்லி ஆதங்கப்பட்டுள்ளார். இனிமேலும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது. அவர்களை போல நாங்களும் செயல்படுவா? நீங்கள் சொன்னதால் தான் அமைதியாக ஆட்சிக்கு பாதிப்பு வரக்கூடாது என பொறுமையாக இருந்தோம் என கூறியுள்ளார்.
 
அதற்கு பதில் அளித்த அந்த பாஜக பிரமுகர், இனிமேலும் நீங்கள் தனி தனி அணியாக இருந்தால் அது உங்களுக்கு தான் ஆபத்து. அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது. எனவே அணிகள் அனைத்தையும் இணைத்து விடுவோம். நாங்களும் உங்களுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறியிருக்கிறார்.
 
அப்போது ஓபிஎஸ் நான் முதல்வராக இருந்தவர் மறுபடியும் அங்கே போய் அமைச்சராக தொடர்வது சரியாக இருக்காது என கூறியுள்ளார். தற்போது நீங்கள் அமைச்சராக கூட இல்லையே, அதற்கு நீங்கள் துணை முதல்வராக இருக்கலாமே என சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார் பாஜக பிரமுகர்.
 
அதன் பின்னர் எடப்பாடியிடம் பேசிய அந்த பாஜக பிரமுகர் இரு அணிகளையும் இணைத்து ஓபிஎஸ் அணியில் உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவியும், ஓபிஎஸ்-க்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்குங்கள். தினகரன் அணியில் உள்ள ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கி அவர்களையும் அமைதிப்படுத்துங்கள் அப்போது தான் அடுத்து வரும் தேர்தலை சந்திக்க முடியும் என கூறியுள்ளார்.
 
அது சரியா வருமா என எடப்பாடியின் கேள்விக்கு எல்லாம் சரியா வரும் நாங்க எல்லாம் பேசிட்டோம் என கூற ஏதோ யோசனையுடன் தலையை ஆட்டிவிட்டு வந்தாராம் எடப்பாடி. அதிமுகவை இணைத்து அதனுடன் கூட்டணி வைத்தால் தான் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்காலம் உண்டு என்பதில் பாஜக உறுதியாக உள்ளதால் இன்னும் சில நாட்களில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.