100 யூனிட் இலவச மின்சாரம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியமைத்தது. தேர்தல் வாக்குறுதியில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக உறுதி அளித்தது.
இதனையடுத்து மே 23-ஆம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா தனது முதல் நாள் கையெழுத்தாக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். அன்று முதல் அமலுக்கு வந்த அந்த திட்டத்திற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வாக்குறுதியின்படி, மின்சார சட்டத்தின் படி இதனை அமல்படுத்த மின்சார வாரிய தலைவருக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழக கூடுதல் தலைமை செயலாளர் என்.எஸ்.பழனியப்பன் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த 100 யூனிட் இலவச திட்டத்திற்கு கூடுதலாக தேவைப்படும் ரூ.1607 கோடி நிதி பட்ஜெட்டில் மின்சார மானியத்திற்காக மின்சார வாரியத்துக்கு ஒதுக்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.