செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2017 (11:19 IST)

ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பால் தமிழர்கள் தலையில் இடி!

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான வழக்கில், உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


 

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கி மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜல் லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது.

காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கப்படுவதாகவும், அந்த அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசின் அறிவிக்கைக்கு, இடைக்கால தடை விதித்தது. மேலும், கடந்த ஓராண்டாக இவ்வழக்கில் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் அமர்வு முன்பு கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில், அரசு முதன்மை வழக்கறிஞர் நரசிம்மா ஆஜரானார்.

அவர், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சார்பில் சுப்பிரமணியசாமியும் ஆஜராகி வாதாடினார். 11 பக்க அறிக்கை ஒன்றையும் அவர் தாக்கல் செய்தார்.

ஆனால், தடை விதிக்கப்பட்டதற்கு முன்னர் இருந்த சூழல்களும், காரணங்களும் தற்போதும் நிலவுவதால், ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கக்கூடாது என்று விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்ததை அடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இடைக்கால அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.

மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்றும், சீக்கிரம் தீர்ப்பை வழங்குங்கள் என கூறுவது முறையல்ல என்றும், ஜல்லிக்கட்டு குறித்து தீர்ப்பு எழுதப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தலாம் என்று போராட்டம் நடத்திய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஆசைகள் நிராசையாக ஆனது. இதனால், தமிழக மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.