இரண்டாவதாக போடப்பட்ட குண்டர் சட்டம்.. தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து என ஆகஸ்ட் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் மீண்டும் சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கில் குண்டர் சட்டத்தின் பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் தன் மகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான காரணங்கள் தெரிவிக்கவில்லை, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தீவிரமானதாக தெரியவில்லை.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்பதால் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தது. ஆனால் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் இரண்டாவதாக போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து சவுக்கு சங்கர் தரப்பு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையில், நாங்கள் நிவாரணம் கொடுக்கிறோம், சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளி வருகிறார், பிறகு மீண்டும் நீங்கள் அவரை வேறு ஒரு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்கிறீர்கள். ஏன் நீங்கள் இதுபோன்று நடந்து கொள்கிறீர்கள் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Edited by Siva