வெள்ளி, 21 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (16:39 IST)

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கு ஒரு வாரத்துக்குள் டெண்டர் விடும் பணியை தொடங்க இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதம் ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியிருந்தது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் மீண்டும் விடப்படும் என்றும், தமிழக மின்வாரியத்தின் 128வது வாரிய கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டரை நிறுவுவதற்கான புதிய டெண்டர் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் ஒரு வாரத்தில் தொடங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர் வாங்க டெண்டர் விடப்பட்டது. இதில் ‘அதானி’ உள்பட நான்கு நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதானி நிறுவனம் குறைவான தொகை கூறியிருந்தாலும், தமிழக அரசு நிர்ணயித்த தொகையை விட அதிகமாக இருந்ததால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, தற்போது மீண்டும் அடுத்த வாரம் இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran