வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (16:28 IST)

ரஜினியை வம்பிழுத்த சீமான் : எங்குபோய் முடியும் இந்த வெறுப்பு அரசியல் ?

விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இதற்காக பிரச்சாரத்திற்கு சென்ற சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழின துரோகி என்றும், அவரை கொன்றது சரி என்ற ரீதியிலும் பேசியுள்ளது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. 
இந்நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் அளித்துள்ள மனுவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது பற்றியும், இந்திய ராணுவம் குறித்தும் தவறான தகவல்களை பரப்பும் சீமானை கைது செய்ய வேண்டும் என்றும், தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் தனக்கு தொடர்பு இருப்பதை அவரே ஒப்புக்கொண்டிருப்பதால் அவரது நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டுமெனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் தனிநபர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக சீமான் தூத்துக்குடி சென்றார். அப்போது அவர்  செய்தியாளர்களிடம் , தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது ரஜினி பேசியதை சுட்டிக்காட்டி பேசிய அவர் ”ஸ்டெர்லைட் போராட்டத்தில் தீவிரவாதிகள் புகுந்தது ரஜினிக்கு எப்படி தெரியும்? அவர் என்ன உளவுத்துறை வைத்திருக்கிறாரா? அப்படியே அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் பயங்கரவாதிகளை பிடித்துதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்பாவி மக்களை ஏன் சுட்டார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
பயங்கரவாதிகள் புகுந்ததாக ரஜினி பேசியது குறித்து அவருக்கு சம்மன் அளிக்க வேண்டுமென நீதிபதியிடம் வலியுறுத்தப் போவதாகவும் சீமான் கூறியுள்ளார். 
 
இந்த நிலையில் சீமான் சிறந்த பேச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, தலைவர் என்ற அளவுக்கு இருக்கும் ஒருவர் இப்படி சர்ச்சையை கிளப்பும் விதத்தில் பேசிவருவதுதான் பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
 
சீமான் தமிழகத்துக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்துள்ளார், அவரை நம்பி ஏகப்பட்ட தம்பிகள் அவர் பின்னே சென்று கொண்டு அவரது கொள்கை முழக்கங்களை உச்ச ஸ்தாயியில் பேசிவருகின்றனர் என்பதாக வைத்துக் கொள்ளலாம். அப்படி அவர்கள்  ஆரோக்கியமான விவசயத்தைப் பற்றி அரசியல் தரவுகள் பற்றிப்  பேசுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை. 
ஆனால் நாட்டிம் பிரதமாராக விருந்தினராக வந்த ராஜீவை கொன்றது நாங்கள்  தான் அதுதான் சரிதான் என்பதாக அவர் பேசியதை எப்படி தமிழர்கள் ஜீரணிக்க முடியும் ?  சீமான் இப்படியே  பேசினால் ஏற்கனவே ஆயுள்தண்டனை பெற்றுவருகிற ரஜீவ் கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை எப்படி விடுவிக்க முயற்சி மேற்கொள்வார்கள்?
 
சமூகத்தில் நன்கு பிரபலமான சீமானைப் போன்றவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மீண்டும் எதாவது வன்முறை வளர்ந்து விடக் காரணமாகி விடுமோ என ஆளும் அரசு  பதறித்தான் போவார்கள்.
ஏனென்றால் ராஜிவ் கொலை போன்று இன்னொரு கொலை எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய பொறுப்பு தமிழர்கள் எல்லோருக்குமே உண்டு. அதை விட பல மடங்கு பொறுப்பு ஆளும் அரசுக்கு உண்டு. ’பல்லுக்குப்பல் பழிவாங்கள் என்றால் மொத்த உலகமே குழிக்குள் தான் கிடக்க வேண்டியதிருக்கும். அதனால் நடந்த  தவற்றினால்  பாதிக்கப்பட்டவர்கள், அந்த பாதிப்பை ஏற்படுத்தியவர்கள்  அதைத் தூண்டியவர்கள்  உள்பட யாராலும் அந்த தவற்றினால் விளைந்தவற்றை மறக்கமுடியாது என்றாலும் கூட அதனை இனிமேலும் சர்ச்சையாக்காமல் இருக்க முயலவேண்டும்.’
 
அந்த வகையில் இனிமேலாவது அரசியலைக் கையில் எடுப்பவர்கள் தம் சுயலாபத்திற்காகவும், ஓட்டுக்காகவும் மட்டும் வெற்றுக் கூச்சல் போடக் கூடாது எனவும் சீமானால் எழுந்துள்ள சர்ச்சை எல்லோருக்கும் எச்சரிக்கை செய்கிறது!
 
 சரி, அடுத்ததாக சீமானின் சொற்கள் ரஜினியை நோக்கித் திரும்பி இருக்கிறது.அது ஏன்? சீமானின் பேச்சில் உள்ள முரணே அவருக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடுமளவுக்கு அவர் அதிக முரண்பட்ட தன்மையில் பேசிவருகிறார். 
அதை ஆராயமல் சிலர் ஆமோதித்து வருவது அரசியலில் வளர்ந்துவரும் சீமானின் ’நாம் தமிழருக்கு ’அழகல்ல. நாம் நாம் தமிழர் கட்சியில் உள்ள உறுப்பினர்கள், சீமானின் பாசத் தம்பிகள் மட்டுமே உண்மைத் தமிழர்கள்போலவும் மற்ற கட்சிகள் ஏனையர்கள் அனைவரும் தமிழரல்லாதோராக சீமான் சித்தரிப்பது அவரது கட்சிக் கூட்டங்களுக்கு வேண்டுமானால் கைதட்டுவதற்கு கலகலப்பு ஏற்படுத்தலாம். ஆனால் ’உண்மையில் நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்தான் பதிலுக்கு நம்மையும் நேசிப்பர்’ என்பதை அதிகமாய் புத்தகம் படித்துப் பேசும் சீமான் மறக்கக்கூடாது. ஓட்டுப் போடாதவர்களை மேடையில் திட்டிவிட்டு இன்று, ஓட்டுப்போடுமாறு தொகுதிகளுக்குச் சென்று மக்களிடம் ஓட்டுப்போடுங்கள் எனக்  கேட்பது நன்றாகவா இருக்கும்? மக்களுக்கு யாருக்கு எப்போது ஓட்டுப்போட வேண்டுமென்பது சீமான் தற்பொழுது  வாழ்ந்து வருகிற மாநிலத்து அறிவார்ந்த மக்களுக்கு தெரியும். திமுகவை நிறுவிய அண்ணாவுக்கு ஆட்சி அமைக்க  ஒரு காலம் வந்தது போன்று சீமானுக்கு ஒரு காலம் வரலாம். அதுவரை சீமானும் அவரது தம்பிகளும் பொறுமையைக் கைக்கொள்ளவேண்டும்.
சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மத்தியில் இன்று ரஜினியை வம்புக்கு  இழுத்து சீமான் பேசியுள்ளதை எப்படிப் பார்ப்பது ? ரஜினி தமிழரா இல்லையா என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டாம். அவரும் ஒரு மனிதர் தான். அதிலும் முக்கியமான ஒரு நட்சத்திர பிரபலம். அவரை தமிழரல்ல...என்று முதலில் பேசியவர், இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது ரஜினி பேசியதை சுட்டிக்காட்டி பேசும்போது, ”ஸ்டெர்லைட் போராட்டத்தில் தீவிரவாதிகள் புகுந்தது ரஜினிக்கு எப்படி தெரியும்? அவர் என்ன உளவுத்துறை வைத்திருக்கிறாரா? எனவும் இதுகுறித்து தான் நீதிபதியிடம் கேட்கப் போவதாகவும் சீமான் கூறியுள்ளார்.
 
ரஜினி பேசியதை அவரே மறந்திருப்பார். இந்த நிலையில் அதை சீமான் இன்று  ஞாபகப்படுத்தி அவரது எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டார். அதிலும் அரசியலும் கலைத்துறையிலும் சிலரை விமர்சித்து பேசிவருவது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்றே பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில் சீமானின் கோபம் நியாயமானதுதான். ஆனால் விடுதலைப்புலிகள் குறித்த நிலைப்பாட்டில் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
 
இதிலிருந்து தமிழர் என்ற போர்வையில் மற்றவர்கள் மீது குற்றம் சொல்லித் திட்டிக் கொண்டிடுப்பதுதான் சீமானிஸம் என்ற போக்கு சீமானின் தம்பிகளிடம் இனியாவது குறையுமா என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.