வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , வியாழன், 9 மே 2024 (14:37 IST)

சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
 
அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் தெரிவித்து இருந்தார்.
 
அதன் பேரில் கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து,தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்த 4 – ந் தேதி அதிகாலையில் கைது செய்தனர். அவரை கோவைக்கு சிறையில் அடைத்தனர்.
 
இதற்கிடையே சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் தங்கி இருந்த டிரைவர் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா பதுக்கியதாக தேனி மாவட்டம் பழனிசெட்டியபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கில் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
சவுக்கு சங்கர் கோவை சிறையில் இருந்ததால், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து நேற்று மதுரையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர்.
 
அப்போது நீதிபதி செங்கமலச்செல்வன் “உங்கள் மீதான வழக்கு குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என கேட்டார். அதற்கு சவுக்கு சங்கர் “இது பொய் வழக்கு. கோவை சிறையில் போலீசார் என்னை கடுமையாக தாக்கினர். இதனால் எனக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் எனது உயிருக்கு அச்சசுறுத்தல் உள்ளது. இதனால் என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்” என்றார்.
 
அதற்கு நீதிபதி தங்களது கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கும் பட்சத்தில் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
 
இதையடுத்து சவுக்கு சங்கரை வருகிற 
22– ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.
 
இதையடுத்து போலீசார் அவரை மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர்.
 
இதனையடுத்து சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாகவும், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு மருத்துவக் குழுவினர் சிறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த அறிக்கை நீதிமன்றத்தில் தனித் தனியாக சமர்பிக்கப்பட்டது.
 
அறிக்கையின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 
 
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.