சசிகலா புஷ்பா ஜாமின் மனு தள்ளுபடி: கைது செய்யப்பட வாய்ப்பு!
சசிகலா புஷ்பா ஜாமின் மனு தள்ளுபடி: கைது செய்யப்பட வாய்ப்பு!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தங்களை கொடுமைப்படுத்தியதாக பானுமதி, ஜான்சி ஆகிய 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
பாலீயல் ரீதியாக தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக அந்த பெண்கள் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக வழக்கறிஞர் சுகந்தி என்பவர் வாதாடி வந்தார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் சுகந்தியின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் ஹரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சசிகலா புஷ்பா உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகனுக்கு முன்ஜாமீன் கிடைத்தது. ஆனால் சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார் நீதிபதி. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பாலியல் வழக்கில் கடந்த மாதம் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கிலும் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.