ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.500.. தக்காளி, வெங்காயம் விலையும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி..!
நேற்று முருங்கைக்காய் விலை ஒரு கிலோ 400 ரூபாய் என விற்பனையான நிலையில், இன்று 500 ரூபாய் என விற்பனை ஆகி வருவதும், தக்காளி, வெங்காயம் விலையும் உயர்ந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் இருந்து வரும் முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திர மாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. ஆனால் வழக்கத்தை விட முருங்கைக்காய் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் 400 ரூபாய் என விற்பனையான நிலையில், இன்று மொத்த விலையை 500 ரூபாய் என்று கூறப்படுகிறது.
இதனால், ஒரு முருங்கைக்காய் 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் முருங்கைக்காய் வாங்குவதையே நிறுத்திவிட்டனர்.
அதேபோல், தக்காளி விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சில்லறை கடைகளில் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் தருகிறது.
வெங்காயம் விலை 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய் உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Mahendran