செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (17:23 IST)

ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வழக்கு..! அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!

Madurai Court
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உண்டியலை அகற்றக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், கோயில் நிர்வாக தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,  உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமநாத சுவாமிக்கும், நந்தி சிலைக்கும் இடையே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நந்தி சிலையானது மூலவரான ராமநாத சுவாமியைப் பார்க்காத வகையில் இந்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
 
இது சைவ முறையில் வழிபடுபவர்களை புண்படுத்தும் விதமாக உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நந்திக்கும், ராமநாத சுவாமிக்கும் இடையே வைக்கப்பட்டிருக்கும் உண்டியலை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள், இந்த உண்டியல் எவ்வளவு நாளாக அங்கு வைக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். 

 
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் நிர்வாக தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.