3 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய மதுராந்தகம் ஏரி
தொடர்மழை காரணமாக மதுராந்தகம் ஏரி 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானம்பதி ஏரி, தாம்பரம் பெரிய ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, சேலையூர் ஏரி உள்ளிட்ட 97 ஏரிகள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய ஏரியாகிய மதுராந்தகம் ஏரியும் நிரம்பியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் சுற்றியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த 2,753 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். ஏரியில் நீர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏரியில் உள்ள 5 மதகுகளும், கரைகளும் பாதுகாப்புடன் நல்ல நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.