1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2024 (19:42 IST)

சென்னைக்கு 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் கொள்முதல்..! மத்திய அரசு ஒப்புதல்..!!

பயணிகளின் வசதிக்காக புதிதாக 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 
 
சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை – சென்ட்ரல் வரையும் மொத்தம் 54 கி.மீ. தொலைவிற்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.  அதன்படி, மெட்ரோ ரயில்களில் தினசரி 2.70 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், மெட்ரோ ரயில்களின் சேவை கூடுதலாக தேவைப்படுகிறது.
 
எனவே,மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தவகையில், இரு வழித்தடங்களில் பயணிகள் வசதிக்காக, மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கையை 4-ல் இருந்து 6-ஆக உயர்த்தவும், 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய கடந்தாண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுப்பிய கருத்துருக்கு தமிழக அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. 
 
இதனைத் தொடர்ந்து கூடுதலாக தேவைப்படும் ரயில்பெட்டிகளை கணக்கிட்டு, ரூ.2,820.90 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் கொள்முதல் செய்ய கடந்த ஜூன் மாதம் நிதி ஆயோக் ஒப்புதல் அளித்தது.  இந்த நிலையில் மத்திய நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறையும் இந்த கருத்துருக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


அதேபோல், இந்த ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதால் சர்வதேச வங்கிகளிடம் இருந்து கடன் உதவி பெற்று மெட்ரோ ரயில்களை தயாரித்து பெற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.