பொங்கல் சிறப்பு பேருந்துகள்! – எந்த ஊருக்கு எங்கிருந்து செல்ல வேண்டும்? முழு விவரம்!
பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 12 முதல் சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.
பொங்கல் திருநாள் அடுத்த வாரம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் முதலே மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 12 முதல் 14 வரை 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மொத்தம் 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் செல்ல கிளாம்பாக்கம், தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட 6 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, கும்மிடிபூண்டி, பொன்னேரி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும்.
பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுகிறது. திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருத்தணி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். விழுப்புரம் வழியாக மதுரை, நெல்லை, கோவை, சேலம் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து புதிய கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K