சமையற்கட்டிலேயே டேஸ்ட் பார்க்கும் அமைச்சர்; அட்டகாசம் செய்யும் அம்மா கிச்சன்!
மதுரையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ள அம்மா கிச்சன் மதுரையில் பிரபலமாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் கல்லூரிகள் பலவும் கொரோனா வார்டுகளாய் மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் அனைவரும் சுகாதாரமனா உணவு வழங்க ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் சார்பில் மதுரையில் அம்மா கிச்சன் தொடங்கப்பட்டது.
கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்வதோடு மட்டுமல்லாமல் சத்தான உணவுகளும் அளித்தால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட இந்த அம்மா கிச்சனிலிருந்து நாள்தோறும் மதுரை முழுவதும் உள்ள கொரோனா மையங்களுக்கு உணவுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
காலை வேளையில் இட்லி, ஊத்தப்பம், மிளகு பொங்கல், வடை மற்றும் மிளகுபால் ஆகியவையும், இரவு நேரங்களில் இட்லி, கிச்சடி, சப்பாத்தி மற்றும் மிளகு பால் ஆகியவையும் தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவ்ர இரண்டு வேளை சிற்றுண்டிகளும், முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்மா கிச்சன் நடவடிக்கைகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரடியாக கண்காணிப்பதுடன் அவ்வபோது உணவு தயாராகும் போதே அவற்றை சுவைத்து தரப்பரிசோதனையும் செய்கிறாராம்.
”கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளவுக்கு சத்தான உணவும் அவசியம் என்பதால் இதை தொடர்ந்து செய்கிறோம். இதனால் மக்கள் பலர் நலம்பெற்று வீடு திரும்புவது மகிழ்ச்சியாக உள்ளது” என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.