1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2015 (02:24 IST)

மதிமுகவில் பரணி மணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 பேர் ராஜினாமா

கரூர் மதிமுக மாவட்டச் செயலாளர் பரணி மணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்டத்தில் உள்ள 10 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
 
கடந்த சில நாட்களாக மதிமுகவிலிருந்து அதன் முன்னணி தலைவர்கள் சிலர் வெளியேறினர். மேலும், சில முக்கிய நிர்வாகிகளை வைகோவே வெளியிற்றி வருகின்றார்.
 
இந்த நிலையில், புதுச்சேரி மாநில, மதிமுக பொறுப்புக் குழு தலைவராக இருந்த ஹேமா பாண்டுரங்கனை, கட்சியில் இருந்து வைகோ நீக்கினார்.
 
இந்த அறிவிப்பு வெளியான நிலையில், கரூர் மாவட்ட செயலாளர் பரணி மணியை கட்சியில் இருந்து நீக்கினார். பரணி மணி, திமுகவினருடன் நெருக்கமாக இருப்பதாலும், அவர் திமுகவிற்கு செல்லக் கூடும் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இதனால், ஆவேசம் அடைந்த பரணி மணி, மதிமுக துவக்கியது முதலே தாம் கட்சிப் பணியாற்றிவருவதாகவும், சமீப காலமாக, வைகோ தவறான முடிவுகளை எடுத்து வருவதாகவும், அவர் தனது நிலையை மாற்றிமாற்றி பேசுவதாகவும், நிலையான  செயல்பாடு இன்றி வைகோ தடுமாறுவதாகவும் குற்றம் சாட்டினார்.
 
இந்த நிலையில்,  கரூர் மதிமுக மாவட்டச் செயலாளர் பரணி மணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கரூர் நகர செயலாளர் பாலமுருகன், கரூர் நகர பொருளாளர் சின்னு,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருள் முருகன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் கதிர்வேல், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முரசு ராமச்சந்திரன், பரமத்தி ஒன்றிய பொருளாளர் ராஜா மணி, பரமத்தி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சேகர், பரமத்தி துணை அமைப்பாளர் அஜய் முருகவேல், கூடலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பழனிசாமி உள்ளிட்ட சுமார் 10 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தங்களது ராஜினாமா கடிதத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு அனுப்பிவைத்தனர்.