1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2017 (17:20 IST)

மாணவர்கள் போரட்டம் நடத்த பிப்ரவரி 3ம் தேதி வரை தடை : களம் இறங்கும் போலீசார்

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெற அனுமதி வேண்டும். மேலும், பீட்டா நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
மதுரை அலங்காநல்லூரில் மாணவர்களோடு சேர்ந்து அந்த ஊர் மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். வாடி வாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என அவர்கள் முழக்கம் இட்டு வருகின்றனர்.  இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வீட்டிற்கு செல்லாமல் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
 
அமைதியாக போராடி வந்த மாணவர்கள் இன்று போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர். மதுரை செல்லூர் ரயில்வே மேம்பாலத்தில் சென்ற ஒரு ரயிலை  மறித்து இன்று போராட்டம் நடத்தினர். மேலும், அந்த ரயில் எஞ்சின் மீது ஏறி அமர்ந்தும் மறியல் செய்தனர். அதன் பின் போலீசார் அங்கு சென்று ரயிலை விடுவித்தனர்.
 
மதுரையில் மாணவர்களின் போராட்டம் தீவிரத்தை அடைந்துள்ளதால், அதை ஒடுக்கும் பொருட்டு, வருகிற பிப்ரவரி 3ம் தேதி வரை மதுரையில் ஆர்ப்பட்டமோ, ஊர்வலமோ, பேரணியோ நடத்தக் கூடாது. அப்படி நடத்த வேண்டுமெனில் 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்.  எந்த அனுமதியும் இன்றி போராட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் எச்சரித்துள்ளார்.