வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (12:58 IST)

குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு வாகனம்… தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!

குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு பயன்பாட்டு வாகனங்களை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது சம்மந்தமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-

முதல்வர் ஸ்டாலின் இன்று (6.12.2021) தலைமைச் செயலகத்தில், காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒளி, ஒலி கட்டமைப்புடன் கூடிய 2 பல்நோக்குப் பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் விதமாக முதல்வர் மேற்கொண்டு வரும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளில் ஒன்றாக, தமிழ்நாடு காவல் துறை அனைத்துத் தரப்புப் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு ஒளி, ஒலி கட்டமைப்பு, அகன்ற திரையுடன் கூடிய பல்நோக்குப் பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளன. இவ்வாகனத்தின் நான்கு புறமும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனத்தின் சுற்றுப்பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைக் காணவும், அதனைப் பதிவு செய்யவும், தேவைப்படின் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும், பாதுகாப்புப் பணியிலும் இவ்வாகனத்தைப் பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல் மட்டுமன்றி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்குப் பணிகளுக்கும், அவசரக் காலங்களில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையாகச் செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வுப் பணிகளைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டுசெல்லும் வகையில், ஒன்று சென்னை பெருநகரக் காவல் ஆணையருக்கும், மற்றொன்று சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டிலும் செயல்படும். இந்த நிகழ்வின்போது, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர்சங்கர் ஜிவால், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.