1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 14 நவம்பர் 2015 (15:26 IST)

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதாக பாஜக பகல் கனவு காண்கிறது : குஷ்பு தாக்கு

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதாக பாஜக பகல் கனவு காண்கிறது. அது நடக்கப்போவதில்லை. தமிழகத்தில் எப்போதும் பாஜக காலுன்றவே முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். 


 
 
குஷ்பு செய்தியாளர்களிடம் பேசும் போது  “நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவித்தார்கள். குழந்தைகளிடம் நவபாரத சிற்பி நேரு என்று கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினத்தையே கொண்டாடுவதில்லை.
 
காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புதன்மை போன்றவற்றை சொல்லித் தந்தார்கள்.
 
ஆனால் இப்போது சகிப்புதன்மை குறைந்து விட்டது. பிரதமர் மோடி லண்டனுக்கு சென்று சகிப்பு தன்மையை பற்றி பேசுகிறார். அங்கு திரண்ட கூட்டம் அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த நாட்டுக்குத்தான் ஓட்டு போடுவார்கள். ஆனால் அவருக்கு ஓட்டுப்போட்ட இந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை பற்றி அவரால் பேச முடியவில்லை.
 
இந்தியா முழுவதும் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவதாக அந்த கட்சி கூறுவது பகல் கனவாகும். தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றவே முடியாது” என்று பேசினார்.