திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 11 மே 2016 (12:09 IST)

தோல்வியை ஒத்துக்கொண்ட கருணாஸ்: அவர்கள் எனக்கு எதிராக செயல்படுகின்றனர் என புலம்பல்

தேர்தல் பிரச்சாரம் இன்னமும் முடியவில்லை, வாக்குப்பதிவும் தொடங்கவில்லை, அதற்குள் தனது தோல்வியை ஒத்துக்கொண்டுள்ளார் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ்.


 
 
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் ஒரு நாள் முன்னர் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் கருணாஸ். மறு நாள் வெளியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் வேட்பாளர் பட்டியலில் கருணாஸின் பெயர் இடம் பெற்றது அதிமுகவினரையே அதிர்ச்சி அடைய வைத்தது.
 
இதனால் கருணாஸ்-க்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் திருவாடனை தொகுதியில் போட்டியிடும் கருணாஸ் மாற்றப்படவில்லை. இதனால் அதிமுகவினர் கருணாஸுக்காக தேர்தல் பிரச்சாரம், பணிகளில் ஒழுங்காக ஈடுபடாமல், அவருக்கு எதிராக செயல்பட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் கருணாஸ் இது பற்றி புலம்பி தள்ளியுள்ளார், தனது தோல்வி உறுதி என தேர்தலுக்கு முன்னரே தோல்வியை ஒத்துக்கொண்டுள்ளார். இது குறித்து கூறிய கருணாஸ், முதல்வரின் உத்தரவில் போட்டியிடும் எனது வெற்றிக்கு அதிமுகவினர் வேலை செய்யவில்லை.
 
என்னை ஒரு எதிரி போல் பார்க்கும் அதிமுகவினர், எனக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்டு வருவது போல் எனக்கு பினால் போய் ஒட்டு போட வேண்டாம் என சொல்கிறார்கள். இது பற்றி ஒரு நிர்வாகி மேல் முதல்வரிடம் புகார் அளித்துள்ளேன் ஆனால் அவர் தனது உள்ளடி வேலைகளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
 
என்னை எந்த அளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தும் அதிமுகவினரால் எனது தோல்வி உறுதியாகிவிட்டது என கருணாஸ் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்னரே தனது தோல்வியை இப்படி பகிரங்கமாக ஒத்துக்கொண்டதும், அதிமுகவினர் மீது புகார் தெரிவித்து வருவதும் அதிமுகவினரிடையே கருணாஸ் மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.