ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2016 (09:24 IST)

ஜெயலலிதா உடல் நிலை: என்ன சொல்கிறது அப்பல்லோ?

ஜெயலலிதா உடல் நிலை: என்ன சொல்கிறது அப்பல்லோ?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கை எதுவும் வெளியிடாமல் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு என கூறி பல நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார் முதல்வர்.


 
 
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு, அவரது உடல்நிலையில் என்ன பிரச்சனை இருக்கிறது போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. முதல்வரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை இந்த நிமிடம் வரை. மருத்துவமனை சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகள் முதல்வரின் உடல்நிலை குறித்து தெளிவான விளக்கம் இல்லாமல், அவர் குணமடைந்து வருகிறார் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்றே வந்தவாறு இருந்தது.
 
இதனால் பொதுமக்கள் மத்தியிலும் கட்சியினரிடையும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இந்நிலையில் நேற்று அப்பல்லோ நிர்வாகம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சற்று தெளிவான அறிக்கையை வெளியிட்டது.
 
அதில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் முதல்வரின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு ஆண்டிபயாடிக் மருந்துகளும், சரியான முறையில் சுவாசம் அளிக்கும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது. முதல்வர் எங்களின் மருத்துவர் குழுவின் கவனிப்பின் கீழ் இருக்கிறார்.
 
எங்களது குழுவில் உள்ள மருத்துவர்களில் தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதய நோய் நிபுணர்கள், சுவாசத்துக்கான சிறப்பு மருத்துவர்கள், நோய்த்தொற்று நிபுணர்கள், நீரிழிவு பிரச்னை நிபுணர்கள் இருக்கிறார்கள். ஆய்வகப் பரிசோதனை முடிவுகளும் எக்ஸ்-ரேக்களின் முடிவுகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு மருத்துவர்களால் கவனிக்கப்படுகிறது.
 
எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களான டாக்டர் ஜி.கிலானி (நுரையீரல் நோய்த்துறை), டாக்டர் அஞ்சான் திரிக்கா (மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சை துறை), டாக்டர் நிதிஷ் நாயக் (இதயநோய் துறை) ஆகியோர்களால் கவனிக்கப்பட்டு ஆராய்ந்த முடிவுகளின் படி, அவருக்கான சிகிச்சை சிறப்பு மருத்துவக் குழுவால் அளிக்கப்பட்டது. எய்ம்ஸ் சிறப்பு மருத்துவர்கள் குழு தற்போது, நமது முதல்வருக்கான சிகிச்சைகளை வழங்கி வருகிறார்கள்.
 
இந்த மருத்துவர்கள் குழு 7.10.2016 வரை அப்பல்லோவில் இருக்கும். சர்வதேச சிறப்பு மருத்துவ நிபுணரான டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் நமது மாண்புமிகு முதல்வரை, 30.9.2016 அன்று ஆராய்ந்து சில முடிவுகளை எடுத்தார். அதன் பிறகு, இன்று நமது முதல்வரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தினர். இவர்களின் ஆய்வுகளின்படியும் வழிகாட்டுதலின்படியும், அப்பல்லோ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக்குழுவினர், மருத்துவச் சிகிச்சைக்கான திட்டம் ஒன்றை மாண்புமிகு முதல்வர் அவர்களின் உடல்நிலையின்படி வகுத்துள்ளார்கள்.
 
முதல்வருக்கு நீரிழிவு பிரச்னையும், குளிர்காலத்துக்கான ப்ராங்கேடிஸ் எனப்படும் நுரையீரலில் சளி சேரும் பிரச்னையும் இருக்கிறது. இதற்கு சிகிச்சை அளிப்பற்கு ஏற்றவாறு, சுவாசத்துக்கான வசதி, சளியை கரைக்க, நெபுலைசேசர், நுரையீரலின் நோய்த்தொற்றை குறைக்கும் மருந்துகள், ஆண்டிபயாடிக் மருந்துகள், ஊட்டச்சத்து, செவிலியர்களின் நல்ல பராமரிப்பு மற்றும் சப்போர்டிவ் தெரபி இவை அனைத்தையும் தயார் செய்து நல்லமுறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.
 
நிபுணர்களின் ஆலோசனையின்படி, முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. ஆகையால் முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டி உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.