ஜெயலலிதாவும் சசிகலாவும் என்னை அறைந்தனர் : போலீசில் சசிகலா புஷ்பா பரபரப்பு புகார்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் தன் கன்னத்தில் அறைந்தனர் என்றும், தான் உயிர் வாழ உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லி காவல்நிலையத்தில் திடீர் புகார் கொடுத்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்து சர்ச்சையில் சிக்கியர் சசிகலா புஷ்பா. அவரை அழைத்து பேசிய ஜெயலலிதா, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கட்சியிலிருந்து அவரை நீக்கினார்.
சொந்த பிரச்சனைக்காக அடித்துவிட்டு, ஜெயலலிதா பற்றி சிவா தவறாக பேசினார் என்று அவர் பொய் சொன்னதாக தெரிகிறது. ஜெயலலிதாவை சந்தித்து விட்டு, டெல்லி சென்று பாராளுமன்றத்தில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தன்னை அறைந்ததாக கூறினார். மேலும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், இன்று டெல்லி காவல் நிலையத்தில் அவர் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார் அதில் “கடந்த ஜூலை 31ஆம் தேதி, போயஸ் கார்டனில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, கரூர் தம்பிதுரை ஆகியோர் என்னை அறைந்தனர். மேலும் எனது எம்.பி பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்னை பயமுறுத்தினர்.
ஆனால் நான் ராஜினாமா செய்ய விரும்பவில்லை. இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த புகாரை அளிக்கிறேன். எனக்கும் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் டெல்லியில் உள்ள எனது வீட்டிற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
பாதுகாப்பு கொடுக்கப்படவில்லையெனில் ஒரு நிமிடம் கூட நான் உயிர் வாழமுடியாது. இதுதான் அதிமுக கட்சியில் எப்போது நடக்கும். அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்னை தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா மீது சசிகலா புஷ்பா போலீசில் புகார் கொடுத்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.