ஆந்திராவின் புதிய தலைநகர் : சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெயலலிதா வாழ்த்து
ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு ஜெயலலிதா வாழ்த்துக் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் அமராவதி என்ற பெயரில் புதிய தலைநகரம் அமைக்கப்பட உள்ளது. இந்த அமராவதி நகரின் அடிக்கல் நாட்டு விழாவின், சிறப்பு விருந்தினர்களாக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பலத்த பாதுகாப்பிற்கு இடையே நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அமராவதி நகருக்கான அடிக்கல்லை நாட்டினார். ஆந்திர மாநிலத்தின் மையப் பகுதியில் அமையவுள்ள, இந்த அமராவதி நகர் உலக தரத்திலான நகராக அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில், ”ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதிக்கு அடிக்கல் நாட்டுவிழா 22ஆம் தேதி [இன்று] நடத்தப்படுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
கடும் முயற்சி செய்து இதை நனவாக்கிய உங்களை நான் இந்தத் தருணத்தில் வாழ்த்துகிறேன். இந்த நன்நாளில் தமிழக மக்கள் சார்பில் ஆந்திர பிரதேச மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆந்திர பிரதேசம் மாநில மக்களின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் புதிய தொடக்கமாக இந்த விழா அமையும் என்று நம்புகிறேன். இந்த விழா மிகுந்த வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று அதில் கூறியுள்ளார்.