வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (08:34 IST)

ஃபேஸ்புக் காதலியுடன் மோகம்: கூலிப்படை வைத்து மனைவியை கொல்ல முயன்ற கணவன்!

பேஸ்புக் காதலால் ஏற்பட்ட மோகம் காரணமாக கட்டிய காதல் மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயற்சித்த கணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு என்ற பகுதியை சேர்ந்தவர் ரூபஸ் ஜெரால்டு என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தேவகுமாரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அடிக்கடி பேஸ்புக்கில் மூழ்கியிருந்த ரூபஸ் ஜெரால்டுக்கு பேஸ்புக்கில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்து உள்ளது. அந்த பெண்ணிடம் மணிக்கணக்கில் சேட் செய்து காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்
 
மேலும் மனைவியின் நகை மற்றும் பணத்தை அந்த காதலிக்காக செலவு செய்துள்ள ரூபஸ், ஒரு கட்டத்தில் முகநூல் காதலி இருக்கும் கேரளாவுக்கு சென்று அவருடன் குடித்தனம் நடத்தவும் தொடங்கியுள்ளார். இதை கண்டுபிடித்த மனைவி தேவகுமாரி இதுகுறித்து கணவரிடம் முறையிட இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனது காதல் மனைவியை அவரது தாயார் வீட்டுக்கு அடித்து துரத்திவிட்டு முகநூல் காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார்
 
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கூறிய தகவலை அடுத்து மனைவி தனது பெற்றோருடன் வந்து பஞ்சாயத்து பேசியுள்ளார். இருதரப்பு பெரியவர்களும் பஞ்சாயத்து பேசி முகநூல் காதலியை விரட்டி அடித்துவிட்டு மனைவியுடன் வாழுமாறு அறிவுரை கூறினார்கள். இந்த அறிவுரையை கேட்டு அவர் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தாலும் முகநூல் காதலி மீது அவருக்கு ஒரு பக்கம் மோகம் இருந்துகொண்டே இருந்தது 
 
இந்த நிலையில் மீண்டும் கேரளா சென்று முகநூல் காதலியை பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் வைத்து ரகசிய தனிக்குடித்தனம் செய்துள்ளார். இதை கண்டுபிடித்த தேவகுமாரி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரூபஸ் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை அனுப்பி உள்ளதாக தெரிகிறது. கூலிப்படையினர் சென்ற நேரம் தேவகுமாரி வீட்டில் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது 
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரூபஸை தேடி வருகின்றனர். முகநூல் காதலி மீது ஏற்பட்ட மோகத்தால் கட்டிய மனைவியை கூலிப்படையை வைத்து கொலை செய்யும் அளவிற்கு துணிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது