1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 3 ஜூன் 2015 (10:20 IST)

டிராபிக் ராமசாமியை அடுத்து தேர்தல் களத்தில் குதித்தார் காந்தியவாதியான சசிபெருமாள்

காந்தியவாதியான சசிபெருமாள், சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
காந்தியவாதியான, சசிபெருமாள் (59) கடந்த சில ஆண்டுகளாக மது ஒழிப்பை வலியுறுத்தி தமிழகம் முழக்க தீவிர பிரசார இயக்கம் நடத்தி வருகிறார்.
 
மேலும், இந்த கருத்தை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நடைபயணம், உண்ணாவிரதம், மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை அமைதியான வழியில் நடத்தி வருகின்றார். இதனால், இவருக்கு பொது மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவந்தது.
 
இந்நிலையில், சசிபெருமாள் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக திடீரென அறிவித்துள்ளார்.
 
இது குறித்து சேலம், இளம்பிள்ளையில் காந்தியவாதியான சசிபெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தேசிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக போட்டியிட உள்ளேன்.
 
இந்த தேர்தலின் போது, என்னுடைய பிரதான கொள்கையான மது ஒழிப்பை வலியுறுத்துவேன். மது ஒழிப்பு வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன். ஜூன் 5 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.
 
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், எனக்கு ஆதரவு அளிக்க கோரி, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் ஆதரவு திரட்ட உள்ளேன் என்றார்.