செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2024 (07:38 IST)

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

Ship
நாகை - இலங்கை இடையிலான கப்பல் ஏற்கனவே இரண்டு முறை நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையே ஆகஸ்ட் 16ஆம் தேதி கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இதனை அடுத்து, போதிய பயணிகள் இல்லாததால் இந்த கப்பல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதன் பின்னர் சமீபத்தில் மீண்டும் கப்பல் சேவை தொடங்கிய நிலையில், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் என்றும், அதன்படி செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்பட்டது. இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, செப்டம்பர் 29 முதல் சனிக்கிழமைகளிலும் கூடுதலாக இந்த கப்பல் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வானிலை காரணமாக இலங்கை மற்றும் நாகை இடையிலான கப்பல் சேவை நவம்பர் 19ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் காங்கேசன்துறை ஆகிய இரு பகுதிகளின் பயணிகள் வசதிக்காக நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நான்கு நாட்களும் தொடர்ச்சியாக கப்பல் சேவை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 18ஆம் தேதி பிறகு, மீண்டும் கப்பல் சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva