1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2017 (12:13 IST)

உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா? - நாஞ்சில் சம்பத்தை விலாசிய பாத்திமா பாபு

சசிகலா பக்கம் சாய்ந்துள்ள அதிமுக பிரச்சாரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில், ஓ.பி.எஸ் அணிக்கு சென்ற பாத்திமா பாபு மற்றும் நடிகை லதா ஆகியோர் பற்றி இழிவான ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். 


 

 
“முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் திட்டம் கழக ஆட்சியை கவிழ்ப்பது அல்லது மு.க.ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது அதுவும் முடியாவிட்டால் தேர்தலுக்கு வழிகாணுவது, இந்த சதி திட்டத்திற்கு சப்பைக்கட்டு கட்ட இன்றைக்கு தகிடுதத்தம் செய்கிறார் தப்பாட்டம் ஆடுகிறார். பாத்திமா பாபு , லதா போன்ற பத்தினி தெய்வங்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்து விட்டது. 
 
ஆனால் பார்த்த முகங்களையே திரும்ப திரும்ப பார்த்து அரசு வீட்டில் இருந்துகொண்டு அரசியலில் காணாமல் போன ஆட்களையும் காலாவதியான தலைவர்களையும் சில தேவையற்ற கூடுதல் சுமைகளையும் அரசு வீட்டில் கூட்டி வைத்துக் கொண்டு கும்மாளம் போடுகிறார் ,பன்னீர் செல்வத்துக்கு மானமும் மரியாதையும் இருக்குமானால் அரசு வீட்டை காலி செய்து விட்டு அரசைப் பற்றி பேச வேண்டும் அரசு வீட்டில் இருந்துக் கொண்டே ஆபத்தான விளையாட்டை விளையாடுவது ஆரோக்கியமானது அல்ல” என்று பதிவிட்டிருந்தார். 
 
இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களை பலர் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாத்திமா பாபு “சம்பத் அவர்களே...உங்கள் வாந்தியை பொதுவெளியில் எடுத்துள்ளீர்கள்...நேரமிருந்தால் பின்னூட்டங்களைப் படித்து பாருங்கள். உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி உங்களுக்கு மிகப் பொருத்தம் என ஐயம் திரிபற நிரூபித்துவிட்டீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.