சசிகலா தற்கொலை எதிரொலி: திமுக நிர்வாகிகள் இருவர் நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை இரண்டு சகோதரர்கள் ஆபாசமாக படம் எடுத்து கடந்த 4 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த நிலையில் சசிகலா என்ற அந்தப் பெண் சமீபத்தில் சகோதரர்கள் இருவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
இந்த தற்கொலைக்கு நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் அனைவரும் பொங்கி எழுந்தனர். குறிப்பாக ஜெயப்பிரியா கொலைக்கு குரல் கொடுத்தது திமுக இந்த கொலைக்கு மட்டும் ஏன் குரல் கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் இருவருமே திமுகவின் நிர்வாகிகள் என்பதால் திமுக தலைவர் உள்பட அனைவரும் மெளனமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் நேற்று உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் தவறு செய்தவர்கள் யாராலும் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை கிடைக்க திமுக குரல் கொடுக்கும் என்றார்.
இந்த நிலையில் தற்போது அதிரடியாக குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தற்காலிகமாகக் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கி இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் இடைக்கழிநாடு பேரூர்க் கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.தேவேந்திரன் மற்றும் டி.புருஷோத்தமன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில், ‘செங்கல்பட்டு நைனார்குப்பம் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும்’ என்று தெரிவித்திருந்தார்