செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (20:03 IST)

ஸ்டாலின், தினகரன் கட்சிகள் ஒற்றுமை – எதில் தெரியுமா ?

கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக திமுக மற்றும் அமமுக ஆகியக் கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் வைக்கும் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதால் ஆசிரியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சென்னையைச் சேர்ந்த மாணவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்  நீதிபதிகள் ஜனவரி 25 (இன்று) க்குள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் இன்றும் பணிக்குத் திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
போராட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை, தினமும் காலையி போலிஸார் கைது செய்து  பின்னர் மாலையில் விடுதலை செய்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதால் காவல்துறையால கடினமான அடக்கு முறைகளைக் கையாள முடியவில்லை.  அதனால் முக்கியமான நிர்வாகிகளைக் கைது செய்து அதன் மூலம் போராட்டத்தை நீர்த்துப் போக செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக திமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் போராட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வருகின்றன. திமுக மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளின் ஆதரவு ஒருங்கே கிடைத்துள்ளதால் ஆளுங்கட்சிக்கு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. ஏற்கனவே இடதுசாரிக் கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.